பொள்ளாச்சியில் சிறார் ஆபாச படங்களை ஃபேஸ்புக்-ல் பதிவேற்றிய அஸ்ஸாம் மாநில இளைஞர் கைது

பொள்ளாச்சியில் ஃபேஸ்புக்-ல், சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த அசாம் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தல், பரப்புதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தமிழக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே திருச்சியில் கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலை தயாரித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஃபேஸ்புக்-ல் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரென்டா பசுமாடாரி என்ற 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பொள்ளாச்சியில் தங்கி டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவரின் செல்போனில் குழந்தைகள் ஆபாச படங்கள் அதிகமாக இருந்ததாகவும், அந்த ஆபாச படங்களை ஃபேஸ்புக், மெசேஞ்சர் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை தொடர்ந்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் அந்த இளைஞரின் சமூக வலைதள கணக்கை முடக்கியுள்ளனர்.

ரென்டா பசுமாடாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே