ஊரடங்கை கைவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும் – ராமதாஸ் எச்சரிக்கை!

ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

சென்னை கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கை மீறி வாகனத்தில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து இன்று அதிகரித்துள்ளது.

அண்ணா சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் விரைகின்றன.

சென்னை என்ன கொரோனா காலத்து சுற்றுலாத்தலமா? ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்… எச்சரிக்கை!

தமிழகத்தின் 23 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் சென்னை தான் முதலிடம்.

10 மாவட்டங்களின் மொத்த பாதிப்பை விட அதிகமாக சென்னையில் 303 பேர் பாதிப்பு.

அதன்பிறகும் பொறுப்பின்றி மக்கள் ஊர் சுற்றினால், அதை காவல்துறை அனுமதித்தால் கொரோனாவிடமிருந்து சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் போல வாகனங்கள் அணிவகுப்பதை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாதா?

அதிக கட்டமைப்பு கொண்ட போக்குவரத்து காவல்துறையால் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதா?

அதையும் மீறும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய முடியாதா?

சென்னையில் ஊரடங்கை மீறிய போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்?

ஒருவேளை ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே