சென்னை நுழைவாயில் – செங்கல்பட்டு

சென்னை மாநகரின் நுழைவாயில் எனக் கருதப்படும் முக்கிய பகுதி செங்கல்பட்டு… புதிதாக இன்று உருவாகும் இந்த மாவட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரை…

விவசாயம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்தையும் ஒருங்கே கொண்டது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், காஞ்சிபுரம் போன்ற வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரங்கள் அருகே அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு…

வெளியூர்களில் இருந்து வந்து குவிந்த மக்கள்தொகை பெருக்கத்தால், சென்னை திணறியபோது கைகொடுத்தது புறநகர்ப் பகுதியாகக் கருதப்படும் செங்கல்பட்டுதான். நாள்தோறும் லட்சக்கணக்கான தென் மாவட்ட மக்கள் செங்கல்பட்டைக் கடந்துதான் சென்னைக்கு வருகின்றனர்.

செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில்தான் பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மென்பொருள் நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் என மக்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளிவழங்கும் தொழிற்சாலைகளுக்கு இங்கு பஞ்சமில்லை…

மாமல்லபுரம், திருப்போரூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் சென்னை வாழ் மக்களுக்கு பெரிதும் உதவுகின்றன. பாலாறு, குளவாய் ஏறி, மதுராந்தகம் ஏரிகள் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகின்றன.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம் தமிழக மக்களின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. காண்போரை பிரமிக்கவைக்கும் சிற்பங்கள் இதன் தனிச்சிறப்பாகும்.வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகளில் முட்டுக்காடு மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கமான ஒன்று…

வண்டலூர் உயிரியல் பூங்கா, விரைவில் அமைய உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ராமகிருஷ்ண மடம், சேவாபாரதி போன்றவை அமைந்துள்ளதும் இந்த மாவட்டத்தில்தான்.

புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள செங்கல்பட்டு அனைத்து துறைகளிலும் மென்மேலும் வளர்ச்சிபெறும் என்பதில் ஐயமில்லை.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 308 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே