தமிழின் சிறந்த படத்தைத் தயாரித்திருப்பேன்” – திருடர் 😋 முருகன் பகீர்!

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட திருவாரூர் முருகனின் கூட்டாளிகளான கணேசன், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அக்கா கனகவல்லி உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருவாரூர் முருகன், மற்றும் அவரது மச்சான் சுரேஷ் ஆகியோர் தனித்தனியே நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை, அந்த மாநில போலீஸார் கஸ்டடி எடுத்து அங்குள்ள சுமார் 82 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதனால் முருகன், தமிழக போலீஸார் வசம் வருவதற்குக் காலதாமதமானது. ஆனாலும், திருச்சி தனிப்படை போலீஸார் இடைவிடாது எடுத்த தொடர் முயற்சியின் பலனாய், பெங்களூரு நீதிமன்றம் திருவாரூர் முருகனை தமிழக போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர், கடந்த 26-ம் தேதி இரவு திருச்சி அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 7 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதையடுத்து, அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார். போலீஸாரின் விசாரணையில்,

`கடந்த 1995-ம் ஆண்டு முதல் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறேன். இடையில் கோவையில் நடைபெற்ற திருட்டு வழக்கில் கைதாகி 5 வருடங்கள் சிறையில் இருந்தேன். ஆனால், அதன்பிறகு போலீஸாரிடம் சிக்கவில்லை. தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அதன்மூலம்போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி’ என்கிற யுத்திகளைத் தெரிந்துகொண்டேன்.

தமிழகத்தைவிட பெங்களூரில்தான் அதிகமாகத் திருடியுள்ளேன். கொள்ளையடித்த பணத்தில் எனது குடும்பத்தாருக்குப் பெரிதாக எதையும் செய்ததில்லை. ஆனால், அநாதை ஆசிரமங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளேன்.

இந்த நிலையில், எனக்கு சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. எனது அக்கா கனகவல்லியின் மகனான சுரேஷ் மிகவும் ராசியானவன். மேலும், அவன் அழகாகவும் இருப்பான். அதனால் அவனை வைத்து தெலுங்கில் 2 திரைப்படம் எடுத்தேன்.

எங்களின் போதாத காலம் அந்தப் படங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் சினிமா ஆசை விடவில்லை. மீண்டும் படம் தயாரிக்க முடிவு செய்து கொள்ளையடிக்க ஆரம்பித்தேன்.

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மற்றும் லால்குடி அருகிலுள்ள தாளக்குடி பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தோடு தங்கி இருந்தேன். அங்கிருந்தபடியே கொள்ளையடிக்க ஏதுவான பகுதிகளை நோட்டமிட்டோம்.

லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளையடித்த நாங்கள், மதுரையில் உள்ள கணேசன் வீட்டுக்குச் சென்றோம். அங்கு வைத்து தராசு மூலம் நகைகளைப் பங்கு போட்டுக்கொண்டோம். அடுத்து நான், திருவெறும்பூர் அடுத்த வேங்கூருக்குச் சென்றுவிட்டேன். சுரேஷ் திருவாரூர் சென்றான். வழியில், மணிகண்டன் போலீஸாரிடம் மாட்டியதால் நாங்கள் சரண் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சினிமா ஆசையில் கொள்ளை

மணிகண்டன் போலீஸாரிடம் சிக்காமல் இருந்திருந்தால், கொள்ளையடித்த நகைகள் மூலம் கிடைத்த பணத்தில் தமிழில் சிறந்த திரைப்படம் ஒன்றைத் தயாரித்திருப்பேன். திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணமும் சினிமாவில் முடங்கிவிட்டது” என்றாராம்.

அதையடுத்து, முருகன் தங்கியிருந்த வீடுகளுக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அங்கு வைத்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் முருகன், “என்னிடம் எந்த நகையும் இல்லை” என்றாராம். தொடர்ந்து போலீஸார், கொள்ளையடித்த நகைகளை போலீஸாருக்கு பங்கு கொடுத்ததாகக் கூறப்பட்டது குறித்தும் கேட்டார்களாம். அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக இருந்தாராம் முருகன்.

தொடர்ந்து அவரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் நகைகளை மறைத்து வைத்துள்ள இடங்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

பாயும் குண்டர் சட்டம்
இந்த நிலையில் திருச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக், திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகனுக்கு உதவியாக இருந்த ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தொடர்ந்து அவர் குற்றச் செயல்களைச் செய்பவராக இருப்பதால் அவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கெனவே லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் முருகனிடம் போலீஸ் விசாரணை தொடர்கிறது. இன்னும் என்னென்ன திகில் கதைகளை அவர் சொல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 403 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே