விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள்

பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி கே.சி.கருப்பணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

300க்கும் மேற்பட்ட காளைகளும், 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டன.

வாடிவாசலுக்கு வெளியே காத்திருந்த வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு காளைகளை பிடித்தனர்.

வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவில் காளையை அவிழ்த்துவிட்டு தொடங்கி வைத்தார்.

200 வீரர்கள் சுழற்சி முறையில் ஐம்பது ஐம்பது வீரர்களாக களம் இறக்கப்பட்டனர். சீறிவரும் காளைகளை, காளையர்கள் பாய்ந்து பிடித்து அடக்கினர்.

வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் விளையாடிய காளைகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டனர்.

மாடுபிடி வீரர் இருவருக்கும், 5 வயது சிறுமி உள்ளிட்ட பார்வையாளர்கள் இருவருக்கும் மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே