டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!!

தென்மேற்குப் பருவக்காற்று வெப்பச்சலனம் காரணம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

பருவமழையை நம்பியில் ஆடி மாதம் விதைத்தவர்களுக்கு புரட்டாசி மாத மழைதான் உயிர் கொடுக்கும் கம்பு, சோளம், பயிறு வகைகளை விதைத்து விட்டு மழையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். புரட்டாசியில் மழை பெய்தால் மட்டுமே பயிர்கள் செழிக்கும். எனவேதான் புரட்டாசியில் மழை பெய்தும் கெடுக்கும் காஞ்சும் கெடுக்கும் என்று சொலவடை சொல்வார்கள்.

தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்துள்ளது. திருவாரூர், கன்னியாகுமரியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டிணம், நீடாமங்கலத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3 செமீ மழையும், கும்மிடிப்பூண்டி, லப்பைக்குடிகாடு, ஜெயங்கொண்டத்திலும் மழை பெய்துள்ளது. மதுரை, கொடைக்கானலிலும் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை மிக கனமழை பெய் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்குப் பருவக்காற்று வெப்பச்சலனம் காரணம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் தென் மாவட்டங்கள், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கனமழை

வளி மண்டல மேலடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதி கனமழை

19ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 20ஆம் தேதி தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே