உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களை ஏலமிடுவதை தடுக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே சில இடங்களில் உள்ளாட்சிப் பதவிகள் ஏலமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலமிடப்படும் செயல்கள் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி தண்டனைக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏலமிடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதால், இதனை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலமிடுவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை மக்கள் உணர்ந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும், உள்ளாட்சி பதவியிடங்களை தேர்தல் மூலம் நிரப்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.