சென்னை நகரை உறைய வைத்த கடும் பனிமூட்டம் : விமான, ரயில் சேவைகள் பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் பணி மூட்டம் காரணமாக 6 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை நிலவி வருகிறது. தொடர்ந்து, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது ஜனவரி 4ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் நேற்றைய தினமும் காலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.

எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இந்த பனி மூட்டம் இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.

இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது இது எங்கள் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. 

இதேபோல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது ட்வீட்டர் பதிவில், சென்னையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் தங்களது விமானத்தின் தற்போதைய நேர மாற்றத்தை தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடும் பனி காரணமாக பல உள்நாட்டு விமானங்களும், சர்வதேச விமானங்களும் தாமதம் அடைந்தன. 

வடமாநிலங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக, வடக்கு ரயில்வே பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 19 ரயில்கள் தாமதமாகியுள்ளன.

எதிரே 200 மீட்டர் தொலைவுக்குள் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால், 19 ரயில்கள் பல மணி நேரம் தாமதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே