ஜம்மு-காஷ்மீரிலிருந்து சுமார் பத்தாயிரம் துணை ராணுவப் படையினர் உடனடியாக திரும்புமாறு மத்திய அரசு உத்தரவு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பிரிவு 370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிரிக்கப்பட்டன.

இதை அடுத்து பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு கூடுதலாக துணை ராணுவப் படையினர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஓராண்டுக்கு பிறகு, இப்போது முதல்முறையாக பெரிய அளவுக்கு கூடுதல் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) மொத்தம் 40 கம்பெனிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) மற்றும் சஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) ஆகியவற்றின் 20 நிறுவனங்களும் இருக்கும் இந்த வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வாபஸ் பெறப்படுகிறது.

இதுபற்றி மூத்த சிஏபிஎப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் இருந்து படைகள் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வருடம் முதல் அவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஓய்வு தேவைப்படுகிறது. மீண்டும் பயிற்சி தேவைப்படுகிறது. எனவே அவர்கள் திரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கூடுதல் படைகளை குவித்து வைத்துக்கொண்டு குளிர்காலத்தில் பணியாற்றுவது என்பது மேலும் சிரமமான விஷயம் ஆகும்.

இதுவும் படைகளை வாபஸ் பெறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.

கூடுதல் படைகளை வாபஸ் பெற்ற பிறகு சுமார் 60 பட்டாலியன் அளவுக்கான சிஆர்பிஎஃப் படைவீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு பட்டாலியன் என்பது சுமார் ஆயிரம் வீரர்கள் கொண்ட குழுவாகும்.

அப்படியானால் 60 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர வேறு சில யூனிட் படையினரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே