டிஜிபி அலுவலகத்தில் வீர வணக்க நாள் அனுசரிப்பு

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் இன்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் காவலர் நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கோவையில், பொதுமக்களின் உயிர் காக்க தன் உயிர் நீத்த காவலர்கள் 3 பேருக்கு, 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக 1997 ஆம் ஆண்டு பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்ட தலைமை காவலர் செல்வராஜ், 2011 ஆம் ஆண்டு விபத்து ஏற்படுத்தி அவரை பிடிக்க முற்பட்ட போது உயிரிழந்த தலைமை காவலர் அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்ட மூன்று பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.

சேலத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் 126 குண்டுகள் முழங்க, காவல் ஆணையர் செந்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், டிஐஜி பிரதீப்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வீரமரணமடைந்த காவலர்களுக்கு 126 குண்டுகள் முழங்க அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போலீசார் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.பண்டி கங்காதரர் தலைமையில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நாளில் 18 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி 30 சுற்றுகளாக 58 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்துவதுடன், ஒரு இரண்டு நிமிடம் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே