CBI அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு – சோமா கட்டுமான நிறுவன அதிகாரி கைது…

சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதற்காக, சி.பி.ஐ. அதிகாரிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கட்டுமான நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

வானகரத்தில் செயல்படும் சோமா என்டர்பிரைசஸ் பல்வேறு மாநிலங்களில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்கை முடிப்பதற்காக தினேஷ் சந்த் குப்தா என்ற தரகர் மூலம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங் என்பவரின் உதவியுடன் சி.பி.ஐ. டிஐஜியான அஸ்ரா கார்க்கை சில நாட்களுக்கு முன் அணுகியுள்ளனர்.

லோதி ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் 16 லட்சம் ரூபாயுடன் காத்திருந்த தரகர் தினேஷ் சந்த், உள்துறை அதிகாரி தீரஜ் குமார்சிங் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டது. தனது செல்போனில் அவர்களின் உரையாடலை பதிவு செய்து,
உள்துறை அமைச்சக அதிகாரி மற்றும் தரகரை அஸ்ரா கார்க் சிக்க வைத்துள்ளார்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சோமா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திர ராவ் அனுப்பியே இரண்டு கோடி ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திர ராவ் ஐ சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

புகார் கொடுத்த தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான அஸ்ரா கார்க் அயல் பணியாக சிபிஐயில் தற்போது பணிபுரிகிறார். மதுரை மற்றும் தர்மபுரி காவல் கண்காணிப்பாளராக அவர் திறம்பட பணியாற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே