தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, ஐடி நோட்டீஸ்?

கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, வருமான வரித்துறை கடந்த மார்ச்சில் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான புகாரில் விளக்கம் கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

2011ஆம் ஆண்டில், ஹெச்எஸ்பிசி ஜெனீவாவில் கணக்கு வைத்திருந்த 700 இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த விவரங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து விசாரணை அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், புலனாய்வுக்குப் பிறகு, வருமான வரித்துறையின் மும்பை பிரிவு முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான புகாரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகளை கண்டறிந்து வரி வசூலிக்கும் கறுப்பு பண தடுப்பு சட்டம், 10ஆவது பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை அடிப்படையாகக் கொண்ட கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்கள், கேமேன் தீவுகளை அடிப்படையாகக் கொண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் கம்பெனி நிறுவனத்தின் இறுதிப் பயனாளர்களாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருந்ததாகவும், இது குறித்த விவரங்களை அவர்கள் கணக்கு காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை நோட்டீசில் புகார் கூறப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான முதல் விசாரணை தேதியாக ஏப்ரல் 12 நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான தகவலை, ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் அடியோடு மறுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே