அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு பிரதான கட்சிகளும் அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் ருசி கண்ட பூனைகள் என விமர்சித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பரமத்தியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நீர் நிலைகளை தூர் அள்ளினார்களோ இல்லையோ தமிழக அரசு கஜானாவை முதல்வர் பழனிசாமி அரசு தூர் அள்ளிவிட்டது. கரோனா லாக் டவுன் காலத்தில் மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகினர்.
அந்தக் காலத்தில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஆனால், அந்த காலக் கட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி கடன் என துணை முதல்வர் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியவில்லை என திமுக தவியாய் தவித்து வருகிறது.
இந்தப்பக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கஜானாவை காலி செய்து சானிடைசர் அடித்து மூடி வைத்துள்ளது.
ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து கஜானாவை பார்த்து காலியாக இருந்தால் பொதுமக்கள் சொத்து, உடமைகள் சூறையாடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.