தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து பதவியேற்றனர்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் கடந்த 9ம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஏற்கனவே கடந்த மாதம் 14ம் தேதி பதவிக்காலம் முடிந்து அனூப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றிருந்தார். இதனால் தேர்தல் ஆணையத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் இல்லாமல், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டும் எஞ்சியிருந்தார்.
இதைத் தொடர்ந்தும் தேதிக்குள் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக கேரளாவின் ஞானேஷ் குமார், பஞ்சாப்பின் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தேர்தல் ஆணையர்கள் இருவர் பதவியேற்ற நிலையில் தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் காலை 11 மணி அளவில் ஆலோசனை நடத்தவுள்ளனர். மக்களவைத் தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது பற்றி இறுதி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.