ஸொமேட்டோ டெலிவரி பாய் மீது புகார் தெரிவித்த பெண் மீது வழக்குப்பதிவு..!!

பெங்களூருவில் ஹிதேஷா சந்திரனி என்ற பெண்ணை உணவு டெலிவரி செய்ய வந்த ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் என்பவர் தாக்கியதாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது அதே காவல் நிலையத்தில் ஹிதேஷா சந்திரனி மீது ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் புகார் அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் (மார்ச் 9) அன்று பெங்களூரைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலமான ஹிதேஷா சந்திரனி, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ஸொமேட்டோவில் தான் ஆர்டர் செய்த உணவு, தாமதமாக டெலிவரி செய்யப்பட்டதால், டெலிவரி செய்த நபரிடம் பணம் தர முடியாது என வாதிட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் தன் மூக்கில் தாக்கிவிட்டு உணவை எடுத்துச் சென்றதாகவும், ரத்தம் சொட்டும் மூக்குடன் வீடியோ பதிவு செய்திருந்தார்.

இந்த விவகாரம் பெரிய விவாதத்துக்கு உள்ளானது.

ஹிதேஷா சந்திரனி
ஹிதேஷா சந்திரனி

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட காமராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஸொமேட்டோவிலிருந்தும் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காமராஜ் கூறுவதாவது “ நான் ஹிதேஷாவை தாக்கவில்லை. அவரின் வீட்டை அடைந்ததும் உணவைக் கொடுப்பதற்கு முன்பே, நான் தாமதமாக வந்துவிட்டேன் என்று என்னைத் திட்ட ஆரம்பித்தார்.

இது கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர், தயவு செய்து இந்த ஆர்டரை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லை என்றால் நான் தான் இதற்குச் செலவிட வேண்டி இருக்கும் என்று கூறி உணவைக் கொடுத்தேன்.

ஆனால் அவர் ஆங்கிலத்தில் என்னைத் திட்டினார்.

திட்டிக்கொண்டே உணவை வாங்கி வீட்டின் உள்ளே வைத்த என்னிடம் பணம் தர மறுத்தார். மேலும், என்னைச் செருப்பால் அடிக்க முயன்றார். இதில் அவரை தடுக்கவே முனைந்தேன்.

அப்போது அவரின் கையிலிருந்த மோதிரம் அவரின் மூக்கில் பட்டு அவருக்கு அடிபட்டது.

நான் அவரைத் தாக்கவில்லை” என்று கூறினார்.

காமராஜ் கூறிய கருத்துக்களும் பெரிதும் பகிரப்பட்டு, அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிலையில், ஹிதேஷா மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார் காமராஜ்.

அவரின் புகாரையடுத்து, அப்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 341,355,504 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது குறித்து தன் நிலைப்பாட்டை தெரிவித்த ஸொமேட்டோ நிறுவனம்,“ நாங்கள் இரு தரப்பையும் ஆதரிக்கிறோம். விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே