கடந்த 10 நாட்களில் 75 சதவீதம் அதிகரிப்பு: தமிழகத்தில் தீவிரமடையும் கரோனா தொற்று – புதிதாக 836 பேர் பாதிப்பு; 4 முதியவர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் சற்று குறைந்திருந்த கரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் தொற்று பாதிப்பு 75 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக 836 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 476, பெண்கள் 360 என மொத்தம் 836 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 317 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 60,562 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 32,929 பேர் உட்பட தமிழகத்தில் 8 லட்சத்து 42,862 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 266 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 553 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 2,023 பேர் உட்பட தமிழகத்தில் 5,149 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் 4 முதியவர்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,551 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,179 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 39,131கோவையில் 56,543, செங்கல்பட்டில் 53,673, திருவள்ளூரில் 44,687 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 257 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 83 லட்சத்து49,379 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று 64,829 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

75 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்தது. ஜூலை மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது. தினசரி உயிரிழப்பும் 100-ஐகடந்தது. ஊரடங்கு உள்ளிட்டநடவடிக்கைகளால் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கரோனாபாதிப்பு குறையத் தொடங்கியது. கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததால் தொற்று மேலும் குறைந்து வந்தது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 450 என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில், திருமணம், பிறந்தநாள், துக்க நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் பங்கேற்பவர்கள் முகக் கவசம்அணியாததாலும், சமூக இடை வெளியை கடைபிடிக்காததாலும் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 500-க்கும் குறைவாக இருந்த தொற்று பாதிப்பு, தற்போது800-ஐ கடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சுமார் 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே