வெங்காயம் மற்றும் பூண்டை நான் அதிகம் சாப்பிட மாட்டேன் – நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருவதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகின்றன.

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வெங்காய விலையேற்றத்தை மையமாக வைத்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமையன்று மக்களவையின் குளிர்கால அமர்வின் போது, வெங்காயம் விலை பிரச்சனை தன்னை அதிகம் பாதிக்கவில்லை. ஏனெனில் நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய உற்பத்தி குறைந்ததே வெங்காய தட்டுபாட்டிற்கு காரணம் என கூறினார்.

டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி 57372 மெட்ரிக் டன் வெங்காயம் ரபி பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, அரசின் கைவசம் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது தவிர துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 20.9 பில்லியன் டாலராக உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 17 பில்லியன் டாலராக இருந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே