இந்திய ரயில்வே வாரியத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி ரயில்வே வாரியத்தில் உள்ள பொறியியல், போக்குவரத்து, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்பட எட்டு துறைகளை ஒருங்கிணைத்து ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து, பொறியியல் உள்பட 4 துறைகளில் தனித்தனியே வாரிய உறுப்பினர்கள் உள்ளதற்குப் பதிலாக, தற்போது புதிதாக 5 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக்குழு உருவாக்கப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த உறுப்பினர்கள் வணிக மேம்பாடு, உள்கட்டமைப்பு, நிதி உள்ளிட்டவற்றை நிர்வகிப்பர் எனவும் தெரிவித்தார்.
மேலும் புதிதாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மருத்துவ சேவைத் துறையும் உருவாக்கப்பட உள்ளதாகவும், இந்த பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் என பியூஸ் கோயல் தெரிவித்தார்.