தீபாவளி பண்டிகையில் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்து கர்நாடகா உள்துறை செயலாளர் ரூபா ஐ.பி.எஸ்., வெளியிட்ட கருத்திற்கு எதிர்கருத்து தெரிவித்ததற்காக ‘ட்ரூ இந்தாலஜி’ என்னும் அமைப்பின் டுவிட்டர் கணக்கு எந்தவித காரணமும் தெரிவிக்காமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இதனையடுத்து முடக்கப்பட்ட அந்த டுவிட்டர் கணக்கை விடுவிக்க வேண்டும் என #BringBackTrueIndology என்னும் ஹேஸ்டாக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருவதால் அது டுவிட்டரில் டிரெண்டானது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புகளும், வரவேற்புகளும் வந்தன. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் பட்டாசுகள் வெடிக்க இந்தாண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, கடந்த நவ.,14ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், பட்டாசு தடை குறித்து ஒரு கருத்தை பதிவிட்டார்.

அதில் அவர் பதிவிட்டதாவது: கொரோனா காரணமாக, பெங்களூருவில் பட்டாசுகள் மீதான தடை இந்த ஆண்டு மட்டும் உள்ளது.

ஒரு வருடம் பட்டாசுகளைப் பயன்படுத்துவதைத் ஏன் தவிர்க்க முடியாது?

நம் மகிழ்ச்சி பட்டாசுகளை மட்டுமே சார்ந்து இருக்கிறதா?. தீபாவளியைக் கொண்டாட பல வழிகள் உள்ளன. தீப ஒளி ஏற்றலாம், நண்பர்கள், உறவினர்களை சந்திக்கலாம்.

ஆனால், சில பிடிவாதமானவர்கள் பட்டாசுகளை மட்டுமே விரும்புகிறார்கள்.

இது நியாயமற்றது. இது இந்துக்களுக்கான பண்டிகையல்ல; பண்டைய வேதங்களில் பட்டாசுகள் குறிப்பிடப்படவில்லை.பட்டாசுகள் என்பது ஐரோப்பியர்களுடன் இந்த நாட்டிற்கு வந்தவை.

இது இந்து மதம் தொடர்பான அடிப்படை பாரம்பரியம் அல்லது வழக்கமல்ல.

வெவ்வேறு பண்டிகைகளில் பல்வேறு விஷயங்களுக்கு தடை தேவைப்படலாம்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். இதனை டுவிட்டரிலும் பகிர்ந்தார். ரூபா ஐ.பி.எஸ்.,சின் இந்த கருத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

மற்ற மதங்களின் பழக்கவழக்கங்கள் குறித்தும் பலர் கேள்வியெழுப்பினர்.

இதனால் டுவிட்டர் பயனர்களிடையே வார்த்தை போர் நிலவியது.

இதற்கிடையே ‘ட்ரூ இந்தாலஜி’ என்னும் அமைப்பின் டுவிட்டர் கணக்கு மூலம் ரூபா ஐ.பி.எஸ்.,சின் கருத்துக்கு எதிர்கருத்து தெரிவிக்கப்பட்டது.

பண்டைய வேதங்களில் பட்டாசுகள் குறித்து குறிப்பிடப்பட்ட சில ஆதாரங்களுடன் ‘ட்ரூ இந்தாலஜி’ டுவிட்டர் கணக்கில் பதிலளித்த நிலையில், திடீரென அந்த கணக்கு டுவிட்டரால் முடக்கப்பட்டது.

ட்ரூ இந்தாலஜி கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

ஆனால், ட்ரூ இந்தாலஜியின் பேஸ்புக் கணக்கில் ரூபா ஐ.பி.எஸ்.,சின் நடவடிக்கையால் தான், தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக குற்றம்சாட்டி பதிவிடப்பட்டுள்ளது.

ட்ரூ இந்தாலஜியின் பேஸ்புக் பதிவில், ‘டுவிட்டர் இந்தியா தலைமையிடம் அமைந்துள்ள பெங்களூருவை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், தீபாவளி பட்டாசுகளை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

பண்டைய நூல்களில் பட்டாசுகள் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். நான் அவற்றில் உடன்படவில்லை. ஆனந்த ராமாயணம் மற்றும் ஸ்கந்த புராணத்திலிருந்து சில குறிப்புகளை மேற்கொள் காட்டினேன்.

அதற்கு அவர், எனது தனிப்பட்ட விவரங்களை வெளியிடுமாறு எனக்கு சவால் விடுத்தார்.எனது தனிப்பட்ட விவரங்களை வெளியிட மறுத்துவிட்டேன்.

இதனால், ‘உங்கள் நேரம் முடிந்துவிட்டது’ என அவர் கூறினார்.

அடுத்த 5 நிமிடங்களில் எனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. டுவிட்டர் தரப்பில் இதுவரை எந்தவொரு தகவலும் அனுப்பப்படவில்லை; காரணமும் கூறவில்லை. எனது கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே, இது ஒரு தற்செயல் நிகழ்வு. நான் வேறு ஏதாவது சொன்னால் எனக்கு என்ன நடக்கும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவ்வாறு அவர் பதிவிட்டார்.

இதனையடுத்து தன்னுடைய கருத்துக்கு எதிர்கருத்தை தெரிவித்ததற்காக ரூபா ஐ.பி.எஸ்., மற்றும் டுவிட்டர் இந்தியா நிர்வாகம், குறிப்பிட்ட கணக்கை முடக்குவது நியாயமில்லை எனவும்; கருத்து சுதந்திரத்தில் தலையிட்டு, எதிர்கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும்; பலரும் ‘ட்ரூ இந்தாலஜி’க்கு ஆதரவாக #BringBackTrueIndology என்னும் ஹேஸ்டாக்கில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோரும் #BringBackTrueIndology ஹேஸ்டாக்கில் ட்ரூ இந்தாலஜியின் கணக்கை விடுவிக்க வேண்டும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

1.84 லட்சம் பேருக்கு மேல் இந்த ஹேஸ்டாக் மூலம் கருத்து தெரிவிப்பதால் டுவிட்டரில் டிரெண்டானது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே