நகைகளுக்குப் பதிலாக தக்காளி மாலை அணிந்த மணப்பெண்

பாகிஸ்தானில் திருமண விழா ஒன்றில் நகைகளுக்கு பதிலாக தக்காளிகளை கொண்ட மணப்பெண் அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமண விழாவில் மணமக்களின் ஆடை அணிகலன்களை ரசிப்பதற்கே நம்மூரில் தனிக் கூட்டம் உண்டு.

அதிலும் குறிப்பாக மணப்பெண்ணின் சிகை அலங்காரத்தையும், தங்க வைர நகை அணிகலன்களும் பெண்கள் மத்தியில் பேசுபொருளாகவே மாறிவிடும்.

இந்த நிலையில் தனது திருமண விழா மூலம் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகள் ஆபரணங்களை அணிந்து உலகின் கவனத்தையே பாகிஸ்தான் பக்கம் திருப்பியிருக்கிறார் இந்த மணப்பெண்.

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது தக்காளி விலை.

விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறும் பாகிஸ்தான் அரசை விமர்சிக்கும் வகையில் திருமண விழாவில் தக்காளி ஆபரணங்களை அணிந்து கொண்டு தன்னை அலங்கரித்திருக்கிறார் மணப்பெண்.

இதுமட்டுமன்றி தங்கத்திற்கு ஈடாக தக்காளி மதிப்பை பறைசாற்றும் வகையில் இந்த மணப்பெண்ணுக்கு மூன்று கூடை தக்காளி களையும் அவரது பெற்றோர் பரிசாக அளித்துள்ளனர்.

பாகிஸ்தானில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ஏறத்தாழ 300 ரூபாய்க்கு விற்பனையாவதால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அண்மையில் தடை விதித்தது.

இந்த நடவடிக்கையே தக்காளியின் விலை ஏற்றத்திற்கு பிரதான காரணம் என கூறப்படுகிறது.

இது ஒரு பக்கமிருக்க, விளை நிலங்களில் உள்ள தக்காளி கொள்ளையடிக்கப்பட்டு அதுவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி திருடர்களை சமாளிக்க பிரதேசமாக காவலாளிகளை விவசாயிகள் நியமித்துள்ளனர்.

ஒரு மணப்பெண்ணின் தக்காளி அலங்காரம் பாகிஸ்தானில் நிலவிவரும் தக்காளி பரிதாபத்தை இவ்வுலகிற்கு அம்பலப்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே