திருவனந்தபுரம் மேயராக பணியை தொடங்கினார் 21 வயது ஆர்யா ராஜேந்திரன்..!!

கேரளாவின் மிகப்பெரிய நகராட்சியான திருவனந்தபுரம் கார்ப்பரேஷனின் இளைய மேயராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று பதவியேற்றார்.

கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கின.

திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.

முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆர்யா, இந்திய மாணவர் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்தார்.

டிசம்பர் 25-ம் தேதி, நடைபெற்ற மாவட்ட செயலகக் கூட்டத்தில் அவரை மேயராக்க சிபிஎம் முடிவு செய்தது.

100 உறுப்பினர்களைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 54 வாக்குகளைப் பெற்ற ஆர்யா ராஜேந்திரன் இன்று மேயராகப் பதவியேற்றார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் அரங்கம் கட்டுக்கடங்காமல் நிறைந்திருக்க மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா புதிய மேயருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இவரே நாட்டின் இளம் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே