அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தீபாவளி வசூலை தடுப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகளுக்கு இடைத்தரகர் மூலம் அதிக அளவு பணம் மற்றும் அன்பளிப்பு வழங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஏராளமான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதகையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 67 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி இயக்குனர் சிவக்குமார், உதவியாளர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

பெரம்பலூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 55 ஆயிரம் ரூபாய் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் வாகன பயிற்சி இடைத்தரகர் இடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே