கடைசி நேரத்தில் ‘பிகில்’ படம் சிறப்பு காட்சிக்கு அனுமதி

பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு படம் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளில் திரண்டனர்.

தீபாவளிக்கு இந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மிகுந்த பொருட்செலவுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின்  சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.

கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் மூலம் சிறப்புக் காட்சிக்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று ஒருநாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதியளித்துள்ளார்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூடுதலான கட்டணம் வசூலித்திருந்தால் அதனை ரசிகர்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

நிபந்தனைகளை ஏற்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்ததையடுத்து, இன்று அதிகாலை 5 மணிக்கு பல்வேறு திரையரங்குகளில் பிகில் படத்தின் முதல் காட்சி வெளியானது.

இதனால் ரசிகர்கள் பெரும் திரளாக அதிகாலை 1 மணி முதல் திரையரங்குகளில் திரண்டனர்.

பட்டாசுகளை வெடித்தும் ஆடிப்பாடியும் அவர்கள் கொண்டாடினர்.

இன்று பிகில், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே