நுஸ்ரத் ஜஹான் வழக்கின் தீர்ப்பு : 16 பேருக்கு தூக்கு தண்டனை

வங்கதேசத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 16 பேருக்கு தூக்கு தண்டனை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

நுஸ்ரத் ஜஹான் இந்த பெயரை வங்கதேசத்தவர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்தது நினைவிருக்கலாம்.

அதே போன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டவர்தான் நுஸ்ரத்.

மதர்ஸா பள்ளி ஒன்றில் பயின்று கொண்டிருந்த 19 வயது மாணவியான அவரை கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று அதே பள்ளியை சேர்ந்த சிராஜ் என்ற ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பெற்றோரிடம் கூறி காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார் நுஸ்ரத் ஜஹான். வழக்கு நடந்து கொண்டிருந்ததால் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்த வேளையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று தேர்வு எழுதுவதற்காக சென்றுள்ளார் மாணவி. இந்த தருணத்தில் ஆசிரியர் சிராஜ்-வும், அவரது சகாக்களும் திட்டமொன்றை தீட்டியுள்ளனர்.

மாணவியை மிரட்டி பார்க்கலாம் இல்லை என்றால் கொலை செய்துவிட்டு தற்கொலை போல் சித்தரித்து விடுவது என்பதுதான் அவர்களின் திட்டம். அ

தைப்போலவே வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவியை நிர்பந்தித்துள்ளனர். அவர் சம்மதிக்காத காரணத்தினால் மாணவி அணிந்திருந்த ஆடையை கொண்டே அவரது கை மற்றும் கால்களை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளனர்.

உடலில் தீப்பற்றி எரிந்தபோது கை மற்றும் கால்களில் கட்டப்பட்டு இருந்த துணிகள் அவிழ்ந்ததால், அங்கிருந்து வெளியே ஓடிவந்தார் நுஸ்ரத் ஜஹான்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் மாணவி. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் உயிரிழக்க வங்கதேச முழுவதும் போராட்ட களமாக மாறியது.

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வீதிகளில் திரண்டனர் பொதுமக்கள். இந்த போராட்டம் அந்நாட்டு அரசுக்கு தலைவலியை கொடுக்க ஆரம்பித்தது.

இதனையடுத்து 18 பேரை கைது செய்த போலீசார் 16 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கில் கைதான 16 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிமன்றம் அனைவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே