முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை..!!

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில் ஜூன் 9 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை தரப்பில், முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இன்று மனுத்தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அமைச்சருடன் வாழ்ந்தற்கான புகைப்பட ஆதாரங்களை சீலிடப்பட்ட கவரில் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்காக நடிகை தாக்கல் செய்த மனு குறித்த விவரங்கள் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் அந்த மனுவை பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிட்டு, முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறை கைது செய்ய கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே