சென்னை மாநகராட்சிப் பகுதியிலுள்ள 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில், மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் தமிழக அரசு அம்மா உணவகம் எனும் பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறது.

இதில், தொழிலாளா்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனா்.

அம்மா உணவகங்களுக்கான நிதியும், உணவுப் பொருள்களும் பல்வேறு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஏழை, எளிய மக்கள், இந்த அம்மா உணவகங்களைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் உத்தரவின்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான முழுச் செலவையும் அந்தந்த மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டு அதற்கான முன்பணத்தையும் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே