அர்னாப் கோஸ்வாமி மீது 10 பிரிவுகளில் வழக்கு….

மகாராஷ்டிரா பால்கரில் சாமியார்கள் இருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மத ரீதியாக வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புவதாக நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 2 சாமியார்கள் மற்றும் ஓட்டுனர் உள்பட 3 பேரை, பால்கரில் குழந்தை திருடும் கும்பல் என கருதி ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் மக்கள் அடித்து படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவத்தில் எந்த மத பின்னணியும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக மறுத்தார்.

எனினும் இந்துத்துவா ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தால் கடும் கோபம் அடைந்தனர்.

ரிபப்ளிக் டிவியில் அண்மையில் அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி விவாதம் நடத்தினார்.

அப்போது திடீரென காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை பால்கர் சம்பவத்தில் தொடர்புபடுத்தி அர்னாப் கோஸ்வாமி விமர்சித்தார்.

இத்தாலிய சோனியா என்றும் சுட்டிக்காட்டி பேசினார் அர்னாப். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் நாக்பூரின் சாதர் காவல் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நாக்பூர் போலீஸ் கமிஷ்னர் பி கே உபதாயா கூறினார்.

காவல் உதவி ஆணையர் வினிதா சாசு கூறுகையில், அர்னாப் கோஸ்வாமி மீது பிரிவு 117, 120, 153 (a)3. 153(b), 295(a), 290 a. 500, 504, 506 ஆகிய 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மத ரீதியாக வெறுப்பை பரப்புவது, அவதுறு பரப்புவது, இரு மதத்தினருக்கு இடையே பகையை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்திலும் அர்னாப்க்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் அர்னாப் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி அர்னாப் கோஸ்வாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே