கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்படுவோர் பட்டியலில் சுமார் 10 ஆயிரம் பேர் இருப்பதால், கரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தடுக்கவும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் இயங்கும்.
- அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது.
- பொதுப்போக்குவரத்து, தனியார் வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது.
- மளிகை, பால், காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.
- மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, நீதிமன்றம் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும்,விரிவான அறிக்கை மாலை வெளியிடப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.