மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் தனக்கு வழங்கப்பட்ட கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என குத்து சண்டை வீரர் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்தார்.

வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரியானா-டெல்லி எல்லையில் சிங்கு பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜேந்தர் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து பஞ்சாப், அரியானா,மத்திய பிரதேசம்,, உத்தரப்பிரதச விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்த ௬-ம் கட்ட பேச்சுவார்த்தை ௯ம் தேதி நடைபெற உள்ளது.

இன்று டெல்லியில் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே 8-ம் தேதி அவர்கள் நாடு தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் இந்த சட்டங்களை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய குத்து சண்டை வீரர் விஜேந்தர் சிங் அரியானா-டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது விவசாயிகள் மத்தியில் அவர் கூறியதாவது:- மத்திய அரசு விவசாயிகளை பாதிக்கும் கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

இல்லை என்றால் எனக்கு வழங்கப்பட்ட ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பேன் என்றார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஏற்கனவே பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், விவசாயிகளுக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை மத்திய அரசிடம் திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே