சூரப்பா விவகாரத்தில் உண்மை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பற்றிய உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பழகன் விமர்சித்துள்ளார்.

சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக ஊழல், முறைகேடு, தகுதியற்றவர்கள் பணி நியமனம் என பல புகார்கள் எழுந்துள்ளது.

இதனால் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழுவை அமைத்திருக்கிறது.

சூரப்பாவிடம் கலையரசன் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

சூரப்பாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவர் என்ன நம்பி நாராயணனா? உண்மையாக இருந்தால் இது தான் கதியா? என ஆவேசமாக பேசியிருந்தார். இது பேசுபொருளாக மாறிய நிலையில், தனக்கு ஆதரவு அளித்ததற்கு சூரப்பா நன்றி தெரிவித்தார்.

சூரப்பா மீதான புகார்கள் எழுந்து பல நாட்கள் ஆன நிலையில், திடீரென கமல் அவருக்கு ஆதரவு அளிப்பது ஏன்? என்ற கருத்து வெகுவாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், சூரப்பா பற்றிய உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே கமல் பேசிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே