கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாகின. குறிப்பாக சிதம்பரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாழ்வான இடங்களில் உள்ள சுமார் 15ஆயிரம் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது.

சுமார் 75ஆயிரம் பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள 228 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. வீராணம் ஏரி நிரம்பி, வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காட்டுமன்னார்கோவிலில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எடையார், பிள்ளையார் தாங்கல், நடுத்திட்டு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரிலும், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரிலும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையம் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்து, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்ப்டடிருந்த லாரிகள், கார்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மழை நீரில் மூழ்கின.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் நிரம்பியிருந்த தண்ணீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு, தரிசனத்துக்காக பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

சிதம்பரம் பள்ளிப்படை மற்றும் இந்திராநகர் பகுதியிலுள்ள குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனைக்குள் மழைநீர் புகுந்ததை அடுத்து, நுழைவுவாயிலில் மணல் மூட்டைகள் கொண்டு தடுத்தபின் ஊழியர்கள் நீரை வெளியேற்றினர்.

இதனிடையே சிதம்பரத்தை அடுத்த குமராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் இணைந்து பார்வையிட்டார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த எடையார் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பரசுராம் தனது சொந்த செலவில் நிவாரணங்களை வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே