நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுர்ஜித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை தமிழகத்தில் நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துக்கள் குறித்து பார்க்கலாம்.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்.
அதே ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசபுரத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் குணா உயிருடன் மீட்கப்பட்டான்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி கரூர் அருகே 600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி உயிர் இழந்தார்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த மதுமிதா பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ எந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
2015 ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே ஒரு கிராமத்தில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
2018 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.