கருப்புப் பூஞ்சை தொற்றுக்கான மருந்து விநியோகம் வரும் திங்கள் கிழமை (மே 31) முதல் தொடக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிறு – குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நிதின் கட்காரியின் முயற்சியின் அடிப்படையில் மகாராஷ்டிரத்திலேயே கருப்புப் பூஞ்சைக்கான இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனிடயே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களுக்கு கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. உடலில் சர்க்கரை அளவில் மாறுபாடு உள்ளவர்களையும் இந்தத் தொற்று தாக்கி வருகிறது.

சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பை கொள்ளைத் தொற்றாக அறிவித்துள்ளன.

இதனிடையே கருப்புப் பூஞ்சைக்கு ஒரு சில மாநிலங்களில் ஆம்ஃபோடெரிசின்-பி என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மகாராஷ்டிர மாநிலம் வர்தா ஜெனிடிக் லைப் சைன்ஸ் நிறுவனம் சார்பில் கருப்புப் பூஞ்சைக்கான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் வரும் திங்கள் கிழமை முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கருப்புப் பூஞ்சை தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கேரளம், தமிழகம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கருப்புப் பூஞ்சை கண்டறியப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே