பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் பாஜக பிரமுகர் படுகாயம்..!!

நெல்லையில் முன்விரோதம் காரணமாக பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச் செயலர் பெரியதுரை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வசிக்கிறார் பெரியதுரை. இவருக்கும் இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவருக்கும் இடையே சிகரெட் புகைப்பதில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றவே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகத் தெரிகிறது.

பெரியதுரைக்கு வலது கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலுதவி முடிந்த நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ராணுவ வீரர் ஜெபமணி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பெருமாள்புரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே