இருப்பதை இல்லாதது மாதிரியும், இல்லாததை இருப்பது போலவும் வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை: காரைக்குடி வாக்காளர்கள் குழப்பம்

இருப்பதை இல்லாதது மாதிரியும், இல்லாததை இருப்பது போலவும் வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை உள்ளதால் காரைக்குடி வாக்காளர்கள் குழப்பமடைந்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதற்குமான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது.

சமீபத்தில் காரைக்குடி தொகுதிக்கென தனியாக ‘வளர்ச்சி காண்போம் காரைக்குடிக்கு’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, நடிகை காயத்ரிரகுராம் ஆகியோர் வெளியிட்டனர்.

மொத்தம் 25 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் நலிவடைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையை புனரமைத்து இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் சிப்காட் தொழிற்பேட்டையே இல்லை. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காரைக்குடிக்கு சிப்காட் ஏற்படுத்தப்படும் என அறிவித்து, நிலம் கையகப்படுத்த நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் திடீரென சிப்காட் திட்டம் கைவிடப்பட்டது.

அதேபோல் செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டாங்கி சேலைக்கு 2019-ம் ஆண்டே மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

மேலும் காரைக்குடி நகரை புனரமைத்து மேம்படுத்த அம்ருத் திட்டம் (அடல் மிஷன் பார் ரிஜூவனேஷன் அன்ட் அர்பன் டெவலப்மென்ட்) செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காரைக்குடியில் மத்திய அரசின் அம்ருத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொகுதியின் முழு நிலவரத்தையும் ஆய்வு செய்யாமல், இருக்கிற திட்டத்தை இல்லாதது மாதிரியும், இல்லாத திட்டத்தை இருக்கிற மாதிரியும் குளறுபடியான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே