கட்சிக்காக குடும்ப வாழ்வையே துறந்தவர்; தனிக்கட்சி தொடங்கி ஜொலித்தவர்: 102 வயதான கே.ஆர்.கவுரி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு

கேரளத்தின் ஆலப்புழாவில் இருக்கிறது அந்த வீடு. அதுதான் ஜனாதிபத்ய சம்ரக்ஷன சமிதி கட்சியின் தலைவர் கே.ஆர்.கவுரியின் இல்லம். அவருக்கு இப்போது 102 வயது ஆகிறது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆழமாக காலூன்ற செய்த கவுரி மார்க்சிஸ்ட் கட்சியால் முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டவர். ஒருகட்டத்தில் அதே கட்சியின் மீது அதிருப்தி கொண்டு தனிக்கட்சி தொடங்கிய கவுரி இந்தத் தேர்தலில் எல்.டி.எப் கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இடதுசாரி தளத்தில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கே.ஆர்.கவுரி வயோதிகத்தின் காரணமாக நேரில் போய் வாக்கு செலுத்த முடியாது என்பதால் தபால்வாக்கு செலுத்தினார். அதன்பின்னர் ‘உறுதியான எல்.டி.எப்’ என செய்தியாளர்களிடம் கூறினார். இதனால் எல்.டி.எப் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கா விட்டாலும் கவுரியின் ஆதரவாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்காக தேர்தல் வேலை செய்கின்றனர். பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத அன்றைய சூழலிலேயே அரசியலுக்குள் நுழைந்த கே.ஆர்.கவுரி கேரளத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

கேரளத்தில் கே.ஆர்.கவுரியம்மாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. காரணம் மார்க்சிஸ்ட் கட்சிக்காக அவர்செய்த தியாகங்கள்தான். கேரளம் பிறப்பதற்கும் முன்னரே இருந்த திருக்கொச்சி சமஸ்தானத்தில் 1952, 1954ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏவாக இருந்தார். 1929ம் ஆண்டு ஜூன் 21ல் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்த கவுரி, தன் சகோதரன் சுகுமாரனால் இடதுசாரி இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு அரசியல் அரங்குக்கு வந்தவர். கேரளத்தில் அன்றைய காலத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த ஈழவர் சமூகத்தில் இருந்து சட்டம் படித்த முதல் பெண் இவர்தான். தொடர்ந்து 1957ல் நடந்த பொதுத்தேர்தலிலும் வாகை சூடினார். அப்போது முதல்வராக இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பதவியேற்றார். முதன்முதலில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த முதல் இடதுசாரி அரசும் அதுதான். அதில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கவுரியம்மா செய்த புரட்சிகள் வார்த்தைகளில் அடங்காதவை.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றும், ஒருவரால் இவ்வளவு நிலமே வைத்து கொள்ள முடியும் எனவும் நிலச்சீர்திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார். கூடவே கே.ஆர்.கவுரி கொண்டுவந்த பெண்கள் பாதுகாப்பு மசோதா இன்றும் பேசப்படுகிறது.
தன் சக கட்சிக்காரரான டி.வி.தாமஸை காதலித்து மணம் செய்தார். 1957ல் அமைந்த முதல் இடதுசாரி அரசில் கணவன், மனைவி இருவருமே அமைச்சர்களாக இருந்தனர். 1967ல் மீண்டும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் இரண்டாவது முறையாக முதல்வரானார். அப்போதும் கவுரியும், தாமஸும் அமைச்சர்கள் ஆனார்கள்.

இடதுசாரி இயக்கம் இரண்டாக பிரிந்த போது மார்க்சிஸ்டை நோக்கி நகர்ந்தார் கே.ஆர்.கவுரி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தங்கினார் அவர் கணவர் தாமஸ். இது தம்பதிகளுக்குள் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தியது. 44 ஆண்டு கால சட்டப்பேரவை உறுப்பினர் பணிக் காலத்தில் இருபது ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தார் கவுரி.

1987ல் கவுரியம்மாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தது மார்க்சிஸ்ட் கட்சி. ‘’இந்த நாடு…கவுரியம்மாவின் சொந்த நாடு” என்னும் கோஷம் கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் ஆட்சியும் அமைத்தது. ஆனால் கட்சிக்குள் கே.ஆர்.கவுரிக்கு எதிராக ஒலித்த கலகக்குரலால் இ.கே.நாயனார் முதல்வர் ஆனார். 1994-ம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கவுரியை கட்சியில் இருந்தே நீக்கியது மார்க்சிஸ்ட். அதன்பின்னரே ஜனாதிபத்திய சம்ரக்ஷன சமிதியை தொடங்கினார் கே.ஆர்.கவுரி. 75 வயதில் கட்சி தொடங்கிய அவர் பின்பு பலரும் சென்றனர்.

காங்கிரஸோடு கூட்டணி

கடந்த 2001 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு ஜெயித்தார். காங்கிரஸ் அரசு அவருக்கு விவசாயத் துறை அமைச்சர் பதவி வழங்கியது. தனது 87 வயதில் அமைச்சராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. கடந்த 2011-ம் ஆண்டு சேர்த்தலா தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அப்போது அவருக்கு வயது 92! கடந்த 2019-ம் ஆண்டு நூறு வயது பிறந்த நாளைக் கொண்டாடினார் கே.ஆர்.கவுரி.

தேயும் கட்சி

நூறு வயதைத் தாண்டிவிட்ட கவுரியால் முன்பை போல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை. கட்சியின் பொதுச் செயலாளருக்கே முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது. அதனால் கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் இருந்த அவர் வயோதிகத்தை காரணம் காட்டி முன்னரே கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு ஏ.என்.ராஜன்பாபு பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார். கவுரி கட்சியின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியில் வளர்ந்து, அங்கு நிராகரிப்புக்கு உள்ளான சமயத்தில்தான் தனிக்கட்சித் தொடங்கினார் கே.ஆர்.கவுரி. ஆனால் வயோதிகத்தால் அவர் கட்சியில் முழுமூச்சில் ஈடுபடமுடியாமல் போக கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலரும் ஒதுங்கிவிட்டனர்.

இப்போதும் கட்சியின் மூத்த நிர்வாகி களில் ஒருபிரிவினர் எல்.டி.எப் கூட்டணி சார்ந்தும், மற்றொரு பிரிவினர் யு.டி.எப் கூட்டணி சார்ந்தும் போய்விட்டனர். இந்நிலையில்தான் கே.ஆர்.கவுரியம்மா தபால் வாக்கு செலுத்திவிட்டு, ‘உரப்பானு (உறுதியான) எல்.டி.எப்’ எனசொல்லியிருக்கிறார். தள்ளாத வயதிலும் இடதுசாரி ஆதரவு நிலைப்பாட்டை கே.ஆர்.கவுரியம்மா எடுத்திருப்பது மார்க்சிஸ்ட் கட்சியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் 102 வயதான கவுரியம்மாவின் கட்சி பலவீனம் அடைந்து விட்ட இந்த சூழலில் இதனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்ற குரலும் ஒலிக்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் கேரள அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத குரலாக இருந்த கே.ஆர்.கவுரி இந்தத் தேர்தலில் வெறுமனே வாக்களித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே