தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி தூக்கி எறியப்படுவார்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி தூக்கி எறியப்படுவார் என்றும், கூட்டணியை ரங்கசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஏப். 2)கூறியதாவது, ‘‘புதுச்சேரியில் பாஜக தங்களது அதிகாரபலம், பணபலத்தை வைத்து தேர்தலில் நிற்கிறது. பல தொகுதிகளில் அராஜகம் செய்கிறார்கள். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவான சூழல் உருவாகாமல் இருக்க பல பகுதிகளுக்கும் சென்று கலவரம் செய்கிறார்கள்.

காட்டேரிக்குப்பத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று மிரட்டுகிறார்கள். சிலரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை பாஜக தலைவர்களாலும், தொண்டர்களாலும் நடந்து வருகிறது.

அவர்கள் புதுச்சேரியில் காலூன்றினால் அமைதி போய்விடும். மத ஒற்றுமை இருக்காது. மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாது. அராஜகத்தை கடைபிடிப்பார்கள்.

எனவே, புதுச்சேரி மக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவை நிராகரிக்க வேண்டும். அவர்களோடு என்.ஆர் காங்கிரஸ் இருக்கிறது. மத்தியில் பாஜக இருப்பதால் அவர்களோடு கூட்டு சேர்ந்துள்ளோம். அவர்கள் நிறைய திட்டங்களை கொடுப்பார்கள் என்று ரங்கசாமி கூறுகிறார்.

பல மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது. அந்த மாநிலங்களில் கூட அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

புதுச்சேரி மக்கள் அமைதியை விரும்புபவர்கள். நிம்மதியாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள். அந்த நிம்மதியை குலைக்கக் கூடாது என்பதற்காக தான் மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பாக காங்கிரஸ் – திமுக கூட்டணி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளோம்.

ஆனால், என்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 90 சதவீதம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெளியிட்டுள்ளார்கள். பிரசாரத்துக்கு செல்லும்போது அபாண்டமாக பொய்யை ரங்கசாமி கூறி வருகிறார். அவர் விரக்தியோடு பேசுகிறார். ஏன் அவர் பாஜக, அதிமுகவுடன் கூட்டாக பிரசாரத்துக்கு செல்லவில்லை.

அதிமுக, பாஜக வேட்பாளர்கள் நிற்கும் இடத்துக்கு சென்று ரங்கசாமி பிரசாரம் செய்யவில்லை. இதிலிருந்து என்.ஆர் காங்கிரஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் இருப்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

இந்தத் தேர்தல் வரை தான் ரங்கசாமியை பாஜக மதிக்கும். அதன் பிறகு அவர் தூக்கி எறியப்படுவார். எப்படி எங்களுடைய ஆட்சியை கலைக்க எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினார்களோ, அதே வேலையை என்ஆர்காங்கிரஸிலும் செய்வார்கள். இது நடக்க போகிறது. இதுசம்பந்தமாக ரங்கசாமி தன்னுடைய கூட்டணி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே