தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல்நாளான நேற்று பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட நயினார் நாகேந்திரன் வேட்புமனு அளித்தார். 

பாஜக அதிகாரபூர்வமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடாத சூழலில், கட்சியின் அங்கீகாரக் கடிதத்தை பி படிவத்துடன் இணைக்காமல் அவர் மனுத் தாக்கல் செய்தார்.

இது கட்சி மேலிடத்துக்கு அவர் கொடுக்கும் அழுத்தம் என்றே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே கட்டமாக முழுமையான பட்டியல் வெளியாகலாம் என்றே கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11.30 மணியளவில் தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக ‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ என்ற பிரச்சார உத்தியைத் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து கமலாலயத்தில் பிரச்சார ரதத்தின் பயணம் தொடங்கிவைக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே