முடிவுக்கு வந்த ‘ஆச்சாரியா’ வெளியீட்டுத் தேதி வதந்தி

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஆச்சாரியா’ படத்தின் வெளியீட்டுத் தேதி வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.

‘சைரா: நரசிம்மா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆச்சாரியா’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சிரஞ்சீவி. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகளில் தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் ‘ஆச்சாரியா’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மேலும், மே 13-ம் தேதி திரையரங்குகளில் ‘ஆச்சாரியா’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. தொடர்ச்சியாகத் தீவிர படப்பிடிப்பில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு ராஜமுந்திரியில் ஒரு மாதம் முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. இதில் சிரஞ்சீவி – ராம்சரண் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனிடையே, படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்பதால் மே 13-ம் தேதி வெளியீடு சாத்தியமில்லை எனத் தகவல்கள் வெளியாகின. இதனைப் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘ஆச்சாரியா’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான மேட்னி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சிரஞ்சீவி – ராம்சரண் நடித்து வரும் ‘ஆச்சாரியா’ படத்துக்காக ராஜமுந்திரியில் ஒரு மாதக் காலம் முக்கிய காட்சிகளை படமாக்கினோம். இதோடு படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுற்றது. உலகளவில் மே 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் ‘ஆச்சாரியா’ வெளியீடு தொடர்பாக நிலவிவந்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே