முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார்

மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே ராணுவம் செயல்படும் என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிபின் ராவத் இன்று காலை சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். 

முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்கும் முன் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பிபின் ராவத், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து நாடாளுமன்ற தெற்கு கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என தெரிவித்தார்.

முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி சிறந்த நிர்வாகத்தை அளிப்பேன் எனவும் உறுதியளித்தார். 

மேலும் பாதுகாப்புப் படை எப்போதும் நடுநிலையுடன் செயல்படும் எனவும்; அரசியலை விட்டு வெகு தொலைவில் தாங்கள் இருப்பதாகவும்; மத்திய அரசின் உத்தரவை ஏற்றே தாங்கள் செயல்படுவோம் எனவும் பிபின் ராவத் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே