லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போலீசில் ஆஜராகியுள்ளார். லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த விவசாயிகள் பேரணியில் 4 பேர் காரி ஏற்றி கொல்லப்பட்டனர். உ.பி போலீஸ் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார். உச்சநீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து விசாரணை குழு முன்பு ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார். ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பி இருந்தது. கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யாமல் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. இதையடுத்து 2வது சம்மன் அனுப்பப்பட்டதால் ஆஷிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார்.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவரின் மகனும் இதுவரை போலீஸார் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போலீசில் ஆஜராகியுள்ளார்.