பினராயி விஜயனுக்கும் கேரளா தங்க கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : என்ஐஏ தகவல்

“கோல்டன் கேர்ள்” என்ற பெயருடன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா ஆடிய தங்க வேட்டை மோசடியில், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்புப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று தேசிய புலனாய்வு ஏஜென்சியே சொல்லி விட்டது. இதனால் பினராயி விஜயனின் ஆதரவாளர்களும், அவரது கட்சியினரும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தை வைத்துத்தான் கேரள எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் பினராயிக்கு எதிராக கொடி பிடித்து வந்தனர். சட்டசபையிலும் கூட அனல் கக்கினர். ஆனால் விஜயனுக்கு இதில் தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று விசாரணை நடத்தி வரும் என்ஐஏ கூறி விட்டது.

ரூ. 500 கோடி அளவிலான தங்க மோசடி வழக்கு இது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் ஸ்வப்னா என்ற பெண்ணும், இன்னும் சிலரும் சிக்கியுள்ளனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டதால் அந்த விசாரணை நடந்து வருகிறது. இதில் விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதுவரை அவருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறி விட்டனர். பினராயிக்கு மட்டுமல்லாமல், பினராயி விஜயனின் அலுவலகத்திற்கும் கூட இதில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் என்ஐஏ கூறியுள்ளது.

சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் (தமிழகத்துடன் சேர்த்து நடத்தப்படும்) முதல்வருக்கு சிக்கலை இந்த வழக்கு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் என்ஐஏ இப்படிக் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. இதை வைத்து அரசியல் செய்யக் காத்திருந்த காங்கிரஸும் பாஜகவும் தற்போது பெரும் ஏமாற்றமடைந்துள்ளன. மேலும் கடந்த பல வாரங்களாக அடுத்தடுத்து போராட்டங்களையும் இவை முன்னெடுத்து வந்தன. தொடர்ந்து போராட்டங்களை நடத்தவும் இவை தயாராகி வந்தன. சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கூட கொண்டு வந்தது. ஆனால் அது தோற்றுப் போனது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியே ஸ்வப்னா சுரேஷ்தான் என்றும் என்ஐஏ கூறியுள்ளது. அவர்தான் அனைத்துக்கும் மூல காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்தான் தங்கக் கடத்தலை முன்னின்று நடத்தியுள்ளார். மிக மிக திறமையாக இதில் அவர் செயல்பட்டுள்ளார். நன்றாக பேசக் கூடியவர். இதை வைத்து பல காரியங்களை இவர் சாதித்துள்ளாராம். முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த சிவசங்கரை கைக்குள் போட்டுக் கொண்டு காரியம் சாதித்துள்ளாராம் ஸ்வப்னா.

ஆனால் இதைத் தவிர முதல்வர் அலுவலகத்திற்கோ அல்லது முதல்வருக்கோ இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இருப்பதாக இதுவரை நடத்திய விசாரணையில் தெரியவில்லை என்று என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். சிவசங்கர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 399 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே