பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாக நள்ளிரவுக்கு மேல் ஆகலாம் – தேர்தல் ஆணையம் தகவல்..!!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வழக்கமான நேரத்தைவிட, நள்ளிரவுவரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அக்டோபர் 28-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், நவம்பர் 3, 7-ம் தேதிகளில் 2 மற்றும் 3-ம் கட்டத் தேர்தலும் நடந்தது. இன்று வாக்குகள் அனைத்தும் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. 

இந்தத் தேர்தலில் 7.30 கோடி வாக்காளர்களில் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர், அதாவது 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இதற்கு முன்பு தேர்தல் முடிவுகள் வழக்கமாக மாலைக்குள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டுவிடும் சூழலில் இந்த முறை காலதாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரி(பொறுப்பு) சுதீப் ஜெயின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிஹார் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிய வழக்கமான நேரத்தைவிட அதிகமான நேரம் பிடிக்கும். அதாவது நள்ளிரவு வரை கூட வாக்கு எண்ணிக்கை நீடிக்கும்.

இதற்கு காரணம் கரோனா வைரஸ் காரணமாக வாக்குப்பதிவு மையங்கள் அதிகரித்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கையை 63 சதவீதம் அதிகப்படுத்தியதே காரணமாகும்.

வழக்கமாக 72,723 வாக்குப்பதிவு மையங்கள் மட்டுமே வைக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு மையங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 515 ஆக உயர்த்தப்பட்டது. ஏறக்குறைய 46.5 சதவீதம் வாக்கு மையங்கள் அதிகரிக்கப்பட்டன.

பிஹாரில் பிற்பகல் 1.30 மணிநேரம் வரை ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. ஆனால், 3 கட்டத் தேர்தலில் 4.16 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆதலால், வாக்கு எண்ணிக்கை முடிய நள்ளிரவு வரை ஆகலாம்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நடந்து வருகிறது. சமூக விலகலைக் கடைபிடித்து அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை நடத்துகின்றனர். இன்று நள்ளிரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்.

கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் 38 மையங்களில் வாக்கு எண்ணப்பட்டன, ஆனால், இந்த முறை சமூக விலகலைக் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பதற்காக 55 மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வழக்கமாக 14 மேஜைகள் போடப்படும் இந்த முறை 7 மேஜைகள் மட்டுமே போடப்பட்டன.

இவ்வாறு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே