ஜல்லிக்கட்டு கதைக்களம்… தமிழில் நாயகன் ஆகிறார் அப்பாணி சரத்!

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தமிழில் படம் இயக்கவிருக்கிறார் மலையாள இயக்குநர் வினோத் குருவாயூர். இப்படத்தில், ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் அப்பாணி சரத் நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் செம்பன் வினோத் ஜோஸ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார் நடிகர் அப்பாணி சரத். அப்போதே, இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உண்டு. அவரை மேலும் பிரபலமாக்கியது ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற ’ஜிமிக்கி கம்மல்’ பாடல். உலகம் முழுக்க சூப்பர் ஹிட் அடித்தது. இந்தியாவில் மலையாள மொழி தெரியாதவர்கள் கூட இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கினார்கள். மேலும், தமிழில் பிரபலமடைந்தார் அப்பாணி சரத்.

இதன் தொடர்ச்சியாக, தமிழில் ’சண்டக்கோழி 2’ படத்தில் நடித்திருக்கிறார். ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது, அப்பாணி சரத் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய தமிழ்ப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்கவிருப்பவர், மலையாளத்தில் கவனம் ஈர்த்த ‘சிகாமணி’, ’சகலகலாசலா’ படங்களை இயக்கிய வினோத் குருவாயூர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே