மேற்கு வங்கத்தில் பபானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சம்சர்கஞ்ச் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை.
கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று மேற்கு வங்கத்தில் பபானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சம்சர்கஞ்ச் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடந்தது. பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டதால் அந்த தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 24 மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்கள் பகுதி முழுவதும் சி.சி.டி.வி. கண்காணிப்பில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களின் உள்ளே அதிகாரிகள் பேனா மற்றும் காகிதம் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பபானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சம்சர்கஞ்ச் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் தற்சமயம் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பபானிபூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி 3,680 வாக்குகள் பெற்று 2,799 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.ஜாங்கிபூர் சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜாகிர் ஹூசைன், சம்சர்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அமிருல்இஸ்லாம் முன்னிலை வகிக்கின்றனர்.