பேனர் விவகாரம்: நீதிமன்றத்தில் அதிமுக பிரமாணப்பத்திரம் தாக்கல்

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பான சிறப்பு புலனாய்வு விசாரணை, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சுபஸ்ரீ தந்தை தொடர்ந்த வழக்கு ஆகியவை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது சுபஸ்ரீ மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜேசிடி பிரபாகர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

விசாரணையின் போது சீன அதிபரை வரவேற்கும் விதமாக பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்தன.

அரசு நிலங்களில் பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றுதான் உத்தரவு பிறப்பித்ததாக நீதிபதிகள் கூறினார்கள்.

சுபஸ்ரீயின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என கூறிய நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இழப்பீடு மற்றும் பேனர் தடுப்புச் சட்டம் குறித்த வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதில் தர உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே