சாலையில் பேனர் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் ஜாமீன் மனு விசாரணையின்போது உயர்நீதிமன்றம் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஜெயபாலின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதிட்ட ஜெயகோபால் தரப்பு வழக்கறிஞர், விபத்து நடந்த பிறகு தனது வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஜெயகோபால் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைப்பதில் தொடர்பு இல்லை என்று கூறி விட்டு ஏன் இரண்டு வாரங்கள் தலைமறைவாக இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் உங்கள் வீட்டுக்கு ஒரு மருமகளை வரவேற்க வைத்த விதிமீறல் பேனர் இன்னொரு வீட்டின் மகளை கொன்று விட்டது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் அவகாசம் கேட்ட நிலையில் விசாரணையை புதன் கிழமைக்கு தள்ளி வைத்தனர்.