வங்கி ஊழியர்கள் இன்று முதல் 2 நாட்கள் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் எஸ்.பி.ஐ., ஐடிபிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் சேவை இன்றும் நாளையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் பணப்பரிமாற்றம் தடைபடும் என்பதால் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.

வேலைநிறுத்தத்திற்கு அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது.

20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சனி, ஞாயிறு என வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் பேட்டியளித்த போது,

  • வங்கி துறையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு வருகிறது.
  • 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது.
  • 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
  • கோரிக்கைகளை தந்து 30 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் ஏற்படவில்லை.
  • விலைவாசி உயர்ந்துள்ளது.
  • வேலை பளு அதிகமாக உள்ளது.
  • அதற்கு தகுந்தவாறு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரினோம்.
  • ஆனால் 12 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் என்றனர்.
  • இதனால் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 27ந் தேதி டெல்லியில் தொழிலாளர் ஆணையர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு எடுக்க சொன்னார். ஆனால் அதிலும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

மும்பையில் நிர்வாகம் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 15 சதவீதம் வரை உயர்த்துவதாக கூறியது.

20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

சனி, ஞாயிறு 2 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். வங்கி ஊழியர்களின் சலுகைகள், பென்ஷன் போன்ற பிரச்சனைகளிலும் நிர்வாகம் பிடிவாதமாக இருப்பதால் திட்டமிட்டபடி 31ந் தேதி, பிப்ரவரி 1ந் தேதி ஆகிய 2 தினம் இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம்.

2 நாட்கள் வங்கி சேவைகள் இயல்பாக இருக்காது. வங்கி கிளைகள் முடங்க கூடிய நிலைமை ஏற்படும். இதற்கு அரசும் வங்கி நிர்வாகம் தான் பொறுப்பு.

வேலை நிறுத்தம் அறிவித்தும் இறுதி நாளில் அழைத்து பேசியும் கோரிக்கைகள் ஏற்கபடவில்லை.

மக்கள் புரிந்து கொண்டு நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தர வேண்டும்.

நிர்வாகம் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம்.

2 நாள் போராட்டத்திற்கு பின் நிர்வாகம் வரவில்லை என்றால் மார்ச் மாதம் 11, 12,13 ஆகிய 3 நாள் போராட்டம் நடத்தப்படும்.

அதிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஏப்ரல் 1ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என அறிவித்து உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே