ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜாரை காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகிறார்கள்.
சென்னை பெருநகரத்தின் இதயமாக திகழும் தியாகராயநகர் பாண்டி பஜார் வணிக மையமாக திகழ்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஷாப்பிங் செல்வதற்கான தலமாக இது அமைந்துள்ளது.
பொலிவுறு நகரம் திட்டத்தின் மூலம் தி.நகர் பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் 58 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை வளாகமும், மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சாலைகளும் அமைக்கப்பட்டது.
இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திறந்துவைத்தார்.
அகலப்படுத்தப்பட்ட நடைபாதை, அமருவதற்கு வண்ண இருக்கைகள், அழகூட்டும் விளக்குகள், பாண்டிபஜாரினுள் எந்த இடத்திலும் ஏறி இறங்க இலவச பேட்டரி கார்கள், சாலையின் இருபுறமும் வாகனம் நிறுத்த தனி இடம், ஒரு வழிச்சாலை என பாண்டிபஜாரின் முகமே மாறியுள்ளது.
நடந்து செல்வதற்கு எளிமையாகவும், சுத்தமாகவும் இருப்பதாகவும் அங்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளதால் இயற்கை போன்று காட்சியளிக்கின்றன.
இதே நிலை என்றும் தொடர அரசு முறையாக பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அப்பகுதியை பராமரிப்பது அரசின் கடமை என்றாலும், அங்குள்ள வணிகர்களும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. நடைபாதையில் 126 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதில் அமர்ந்து இளைப்பாறவும் வசதி செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது.
குப்பை கூளங்களைப் போட்டு அசுத்தமாக்கிவிட்டு, பராமரிப்பு சரியில்லை என அரசை சுட்டிக் காட்டாமல், பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அகலமான சாலையால், பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் இன்றி பாண்டி பஜாரில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.