ஜூலை – செப்டம்பர் 2019, காலாண்டில் இந்தியாவின் பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது ரூ.23,045 கோடி நஷ்டமடைந்துள்ளது ஏர்டெல்.
இதே காலாண்டுக் காலக்கட்டத்தில் கடந்த ஆண்டில் நிகரவருவாய் ரூ.119 கோடி ஈட்டியது ஏர்டெல்.
ஆனால் புதிய கணக்கீட்டு முறையினால் ஒப்பீடு செய்ய முடியாது என்கிறது பார்தி ஏர்டெல்.
இந்நிலையில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 4.7% அதிகரித்து ரூ.21,999 கோடியாக உள்ளது.
அரசுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை பாக்கியில்லாமல் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த உத்தரவு, நிறுவனத்தின் நிதி நிலைகளில் எதிர்மறைத் தாக்கம் செலுத்தியது என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.6164 கோடி முதன்மைத் தொகை, பிளஸ் 12,129 கோடி ரூபாய் வட்டி, ரூ.3,760 கோடி அபராதத் தொகை, அபராதத்தின் மீதான வட்டி ரூ.6,307 கோடி ஆகியவையாகும்.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஆண்டு மொத்த வருவாய் கணக்கீட்டில் தொலைத் தொடர்புச் சேவை அல்லாத வர்த்தகங்களின் வருவாய்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் உரிமத்தொகை, அலைக்கற்றைக் கட்டணம் ஆகியவை அரசுக்குச் செலுத்தப்பட வேண்டியது என்று உத்தரவிட்டது.
தற்போது இந்த ஏஜிஆர் உத்தரவை எதிர்த்துத்தான் பார்தி ஏர்டெல், ஐடியா-வோடபோன் நிறுவனங்கள் போராடி வருகின்றன.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் இன்று ரூ.362.65 என்று இருந்தது, 1.59% சரிவு கண்டுள்ளது.
சந்தை முடிந்த பிறகு இந்த காலாண்டு முடிவுகளை நிறுவனம் அறிவித்துள்ளது.